வியாழன், 5 ஆகஸ்ட், 2010

எப்படி ஈர்த்தாய் என்னை..

உன்னை
எனக்குப்
பிடிக்கவில்லை..

உன் பெயரையும்
நான்
இரசிக்கவில்லை..

உன் தோற்றத்தில்
நான்
தோற்கவில்லை..

நீ
கூட்டத்தில்
தனித்து இல்லை..

பதறும ளவில்
உன்
பருவம் இல்லை..

உருகும் வகையில்
உன்
உருவம் இல்லை..

நளினம் எதுவும்
உன்
நடையில் இல்லை..

ஒழுங்கு சிறிதும்
உன்
உடையில் இல்லை..

சிறு
பனி சிந்தும்
பார்வை இல்லை..

ஒரு
தேன் சிந்தும்
வார்த்தை இல்லை..

மொத்தத்தில்
உன் பெண்மையில்
எதுவும் - என்னை
வெகுவாய்க்
கவரவில்லை..

நீ
வேறோர் ஆணை
ஈர்ப்பாய் என்றும்
உறுதியாய்ச்
சொல்வதற்க் கில்லை..

இப்படி
இத்தனை இல்லைகளின்
இல்லாள் நீ
எப்படி
வசீகரித்தாய்
என்னை
.
.
.
.
.
.
விட
அழகான
எனதுயிர் நண்பனை..

அது மட்டும்
எனக்கும் விளங்கவேயில்லை..

- அரவிந்த் குமார்.பா

நித்திலமே..

மாங்கனியில் வண்டு போல - மழை
முகிலுடைக்கும் தென்றல் போல
வான வில்லின் மிச்சம் போல
உன் - பின் கழுத்தின் மச்சம் போல

இரகசியமாயிருக்கிறாய் - என்
இரத்தத்திலும் வசிக்கிறாய்..

தேகமென்பது தேய்ந்து போகும்
மோகமானது தீர்ந்து போகும்

ஆன போதும் என் காதல் வாழும் கண்ணே..
நான் வேகும் போதும் சோதித்துப் பார் பெண்ணே..

ஓயாமல் உன்னை நினைத்தேன் - இமைகள்
சாயாமல் உன்னுருவம் குடித்தேன்..

அந்த செயல்களின் பின் விளைவுகள் - இன்று
இதயத்தில் உன் சுவடுகள்..

நெடுங்காலம் நேசித்த உணர்வுகள் - பழங்காலம்
தொட்டுப் பழகிய நினைவுகள்
முதல் நாளே என்னிடம் தோற்றுவித்தாய்
விழியசைவுக் கெல்லாம் - விரிவுரை
எழுத வைத்தாய்..

உன் புற அழகை கண்டபோது - புத்தியிலே
கொஞ்சம் சஞ்சலம் வந்தது சத்தியமே..

உன் அக அழகால் அத்தனையும் நீக்கினாய்
நீ நீள் கடலும் காணாத நித்திலமே ..

- அரவிந்த் குமார்.பா

இரவுகள் இழந்தேன்..

இரவுகள் இழந்தேன்
இதயமும் இழந்தேன்
இனிமேல் இழக்க
எதுவுமில்லை..

உணர்வுகள் பிரிந்தேன்
உறவுகள் பிரிந்தேன்
என் உயிரும் தருகிறேன்
தயக்கமில்லை..

அன்பே
என் நாட்களை
நீ
நீளமாக்கிவிட்டுப்
போனாய்..

ஆம்
நெடுஞ்சாலை
இரைச்சலையும்
தாண்டி
என் நெஞ்சில்
நுழைந்தாய்
தேனாய்..

ஏனோ
எந்த ஏற்பாடும்
கொடுக்கவில்லை
எனக்கு
தூக்கம்..

ஆனால்
இவை - நீ
வந்த பிற்பாடு
எனக்குள்
ஏற்பட்ட
மாற்றம்..

இப்போதெல்லாம்
உலறாமல்
விடிவதில்லை
என்னுடைய
ராத்திரி..

இவற்றை யெல்லாம்
நீ - உணராமல்
வருத்துவது
நியாயம்தானா
காதலி..

- அரவிந்த் குமார்.பா

புதன், 4 ஆகஸ்ட், 2010

கனவே..

கனவே..
எப்போது
அவள் கட்சியில்
நீ சேர்ந்தாய்..

மனமே..
எப்போது
அவள் மடியில்
நீ வீழ்ந்தாய்..

தினம் முழுதும்
கணம் முழுதும்
என் வார்த்தைக்கு
உடன்பட்ட
என் உயிரே..

எப்போது
அவளை
உன்
உலக மென்றாய்..

வானகமும்
வையகமும்
வாசனைப்
பூத் தூவ..

வேதங்களும்
ஐம்பூதங்களும்
பொழுதும் - என்
புகழ் பாட..

சூரியரும்
சந்திரரும்
பகரும் மொழி
பணிய..

சீறி வரும்
கடற் பேரலையும்
என்
சுடர் விழியில்
தணிய..

என்னைச் சுற்றி
இராஜ்ஜியம்..
அதைச்
சொன்னால்
தோன்றும்
காவியம்..

நான்
புவிக்கே
மன்னன் -
ஆயினும்

பிறப்பால்
அடிமைதான்
அவளிடம்..

- அரவிந்த் குமார்.பா

அன்பாளா...




உன்
அன்பாலெ ன்னை
உன்பாலி ழுத்தாய்..

நீ
பெண்பாலெ ன்னை
வெண்பா வடித்தாய்..

தூங்குகின்ற
நேரம் கூட - உன்
தூய முகம்
எண்ண வைக்கிறாய்..

காணுகின்ற
தூரமெ ங்கிலும்
வானம் போல
நிறைந்தி ருக்கிறாய்..

காலைச் சேவல்
கூவும் பொழுதே
உன் னாதிக்கம்
என்னில்
ஆரம்பிக்கும்..

உனைக் காணும்
ஆவல் மிகுதியாலே
இதழ் சாயத்தில்
விரல்கள்
பொட்டு வைக்கும்..

கால்கள்
இடம்மாறியே - என்
காலணிக்குள்
நுழைந்திருக்கும்..


உன் தோளில்
சாயும் வரை
என் ஆறறிவும்
அணைந்திருக்கும்..

தரையில்
பாய் விரித்து
மெத்தையில்
தூங்குவதும்..

அம்மாவை
சில நேரம்
அத்தையெ ன்று
சொல்லுவதும்..

அன்பாளா
உன்னாலே
நான் கொள்ளும்
அவஸ்தையடா..

தூங்காத
ராத்திரிகள்
உன்னினைவில்
துவளுவதும்..

தலையணையே
நீயென்று
தனியாகப்
புரளுவதும்..

தாளவில்லையடா
தவிர்த்தலும்
துன்பமடா..

கண்ணாளா..
நீ தரும்
கவலைகட்கு
பஞ்சமில்லை..

கவிதைக்காய்
சொல்லவில்லை
காதலொன்றும்
இன்பமில்லை..

- அரவிந்த் குமார்.பா


செவ்வாய், 3 ஆகஸ்ட், 2010

என் எழுத்தில் இருப்பவளே..

என் எழுத்தில்
சுவையாய்
இருப்பவளே..

என் கருத்தில்
கனமாய்க்
கிடப்பவளே..

என் மனதில்
புயலாய்
மையம் கொண்டு

என் விழியை
மழையாய்க்
கடந்தவளே..

எத்தனைத்
துன்பங்கள்
இதுகாறும்
உன்னால்..

பித்தனைப்
போல
இருக்கின்றேன்
எதனால்..

கத்தியால்
குத்தினாலும்
பிழைத்திருப்பேன்
ஆனால்..

நீ
காதலால்
குத்திவிட்டாய்
செத்துவிட்டேன்
அதனால்..

வெள்ளைத்
தாளாய்
இருந்ததென்
மனது..

நீ
பிள்ளைக்
காதல்
பழகிக் கொண்டாய்..

உண்மை
என்றே
நம்பி விட்டேன்..

உன்
கண்மையில்
நான்
கரைந்து விட்டேன்..

என்
நெற்றியில் ஏதும்
எழுத்து
கண்டா

நீ
பற்றியெ ரியும்
பாசம்
கொண்டாய்..

நான்
கற்றதையெ ல்லாம்
கவர்ந்து கொண்டு
மற்றதை யெல்லாம்
மறந்து சென்றாய்..

நீ
காதலோடு
பார்த்தாயே
அவை யெல்லாம்
கற்றதற்குக்
கூலியா..

நீ
கள்ளமின்றி
சிரித்தாயே -
அவையெல்லாம்
திட்டமிட்ட
போலியா..

- அரவிந்த் குமார்.பா

தாமரைப் பூவே




தாமரைப் பூவே
என் பிஞ்சு நெஞ்சம்
உன்னிடத்தில்
தஞ்சம் வந்ததா
சொல்..

சூரிய ராஜா
நீ பார்வையால் - சுட்டபின்
நான்
சுற்றம் மறந்த
பெண்..

தாவணி நிலவே
உன் ஆடைக்குள்ளே
எந்தன் ஜீவன்
அலைகின்றதா
பார்..

தமிழின் தலைவா
உள்ளத்தில்
முள்ளொன்று
குத்தியது - அதுவா
உன் உயிர்..

ஆமாம்
சொர்க்கமே
அதை அப்படியே
வைத்திரு
பிய்த்துவிட
வேண்டாம்..

மாட்டேன் அன்பரே
அதை ஆஸ்தியென்று
கருதி
இன்னும் வளர்ப்பேன்
நான்..

நன்றி நங்கையே
எந்தன் நெஞ்சிலே
வண்ணத் திங்களாய்
நீ
வாழ்வாயாக..

போதும் மன்னவா..
உங்கள் பொற்பதம்
அணைத்துக் கொள்கிறேன்
அனுமதிப்பீரா..

- அரவிந்த் குமார்.பா


செவத்தவளே..




செவத்தவளே
என் செவத்தவளே
என்ன சிரிச்சே
செயிச்சவளே..

என் கண்ணுல
மெதுவா தடுக்குனதால
நெஞ்சுல
விழுந்தவளே..

நீ
ஓரமாப் பாத்ததெல்லாம்
காரமாப் பாத்ததெல்லாம்
வேகமா புத்தியில் போயி
மத்தியில் நின்னு
பொதஞ்சதடி..

ஓன் ஈர உதட்டில்
குடிவர
ஏன் பேருக் கென்னைக்கு
யோகமோ..

அந்த நாளத் தேடி
நூலாப் போறேன்..

செவத்தவளே - என்
செவத்தவளே

காட்டு வெள்ளம் - அது
ஓடி வந்தா
எந்தப் பாதையும்
பாப்பது இல்ல..

ஏன் பாட்டு வெள்ளம் - அது
அது ஓடிவர
ஓன் பார்வையத்
தேடுது புள்ள..

செவத்தவளே - என்
செவத்தவளே

ஒரச்ச மழ
பேயையில
வெரச்ச மண்ணு
கரைவதப் போல

நீ சிரிச்சுக்கிட்டே
பாத்ததுல
உசுர் அரிச்சுக்கிட்டு
போயிருச்சே..

மொளச்ச வெத
பூமிக்குள்ள
தொளச்சுக்கிட்டு
வாரதப் போல

வெடிச்சுருச்சு
ஓன்னெனப்பு
மூளையோட
முடிச்சுக்குள்ள..

போகாதுன்னு
நெனச்ச
ஏம்மனச
நீ கைப்பிடிச்சு
கூட்டிப் போயிட்ட..

வேணாமுன்னு
கெடந்த
உயிர்க் கொழுந்த
நீ மய்ய வச்சு
மயக்கிப்புட்ட..

தீராமக் கெடந்த
ஏந்திமிரில
நீ
தீய வச்சுப்புட்ட..

காப்பாத்துன்னு
நான்
கதற
நீ
கைய்ய விரிச்சுப்புட்ட..

- அரவிந்த் குமார்.பா


திங்கள், 2 ஆகஸ்ட், 2010

காதல் சொல்ல வந்தாள்

நீதானா
என் பெயர் சொல்லி
அழைத்தவள்.
என் உயிர்க்குள்ளே
நிலைத்தவள்.

நலம்தானா
என் சுகம் சரிக்கும்
உன் கண்கள்
என் அகம் பெயர்த்த
உன் இதழ்கள்.

இப்போதுதானா
கிடைத்தது
நேரம்..
இன்றுதானா
விடை பெற்ற துன்
நாணம்..

படபடவெனப்
பேசும் மொழி
எங்கே..

தடதடவென
ஓடும் கால்கள்
எங்கே..

முதன்முதல் வந்த
காதலதைச் சொல்ல
அத்தனையும் இன்று
அடமானம் வைத்தாயோ..

மெதுமெதுவாய்
காதல் சொன்ன பிறகு..
துறுதுறுவெனத்
துளிர்க்குமோ சிறகு..

சரசரவென
இழந்தவை யத்தனையும்
அப்புறமாய் வட்டியுடன்
மீட்பாயோ..

தனியே வந்தபின்
ஏனடி
தள்ளி நிற்கிறாய்..

கவிதை நேரமிது
பிறகேன்
கண்ணீர் வடிக்கிறாய்..

கவலை
பேச வேண்டாம்..
வா..
நிறையக் காதலைப்
பேசுவோம்..

காத்திருக்கிறது
வெளியே
இயற்கை -
வா.. அதனிடம்
வாழ்த்துக்கள் வாங்குவோம்..

- அரவிந்த் குமார்.பா

பச்சைப் பசுங்குயில்

பச்சைப் பசுங்குயில்
இச்சைக் கருங்குயில்
இப்போது இல்லை என் பக்கம்..

எங்கள் சிறகுகள்
உரசிய சிருங்கார மேகங்கள்
என்னை கேலி செய்து
சிரிக்குது நித்தம்..

கரையில் நடந்தேன்
அலையோடு
ஆறுதல் கிடைக்க..

மழையில் நனைந்தேன்
அழும் போது
கண்ணீரை மறைக்க..

கலைந்து போனது
கனவெல்லாம்..
சிலுவை யானது
நினைவெ ல்லாம்..
மறந்து போக
முயற்சி செய்தேன்
மறதியின் குருதியைக்
குடித்து விட்டாள்..

ஒரு நொடியில்
காதல் கலைந்து போனதும்
என் செடியின்
இலைகள் காய்ந்து போனது..
இன்னொரு மழையில்
துளிர்க்க நினைத்தேன்
சருகாய் இருந்தும்
உதிர மறுக்கிறாள்..

- அரவிந்த் குமார்.பா

கனல் நிலவே




கனல் நிலவே - என்
கனவுக்குள் புகுந்து
கலவரமூ ட்டுகிறாய்..

மெதுமெதுவாய் - என்
நினைவுக்குள் புகுந்து
நிலவரம் மாற்றுகிறாய் ..

ஆவியானது
என் உயிர் மொத்தம்..
உன் ஜோதி விழியில்
எத்தனை வெப்பம்..

உன் பாதிப்புன்னகை
கண்டது பிழையா..
இந்தப் பாதிப்புகள்தான்
காதலின் விலையா..

வேண்டுமென்றே
கண் முன்னால் - நீ
நடந்து போகின்றாய்..

உன் விழியின் குழியில்
விழுவேனா வென்று
விரதமி ருக்கின்றாய்..

மறந்தும் கூட
மௌனச் சுவரை
உடைக்க மறுக்கின்றாய்..

உன் பருந்துப்
பார்வைக் கெலி போலென்னை
உணர வைக்கின்றாய்..

அருவியில்
குதிக்கச் சொன்னால்
அடுத்த நொடியில்
குதிப்பேன்..

உன் அருகில்
போய் வரச் சொன்னால்
அய்யோ முடியாமல்
துடிப்பேன்..

உலகம் முழுதும்
எனதென் றாலும்
இல்லையெ னக்கு
மகிழ்ச்சி..

என் கவனம்
குலையாமல்
உன் கண்களைப்
பார்த்தால் - அதுவே
பெரிய புரட்சி..

விழாமல்
உன் விழி
எதிர் கொள்ளப்
பழகிக் கொள்கிறேன்..

உன் கலாப மொழி
அத்தனையும்
கற்றுக் கொள்கிறேன்..

பலாச் சுளை
கன்னங்களை
நினைத்துக் கொள்கிறேன்..

இந்த நிலாப் பெண்ணை
மனைவியாக்க
முயற்சி செய்கிறேன்..

- அரவிந்த் குமார்.பா